குருந்தூர் மலை விவகாரம்! கூறப்போகும் கருத்துக்கள் சாதகமாகவோ பாதகமாகவோ அமையலாம் - அமைச்சர் அறிவிப்பு

முல்லைத்தீவு - குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நான் கூறப் போகும் கருத்துக்கள் வழக்குகளுக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவே அமையலாம்  என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயார்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு, குருந்தூர் மலை விவகாரம் தொடர்பாக இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நான் கூறப்போகும் கருத்துக்கள், அந்த வழக்குகளுக்கு சாதகமாவோ பாதகமாகவோ கூட மாறலாம்.

எனவே, வழக்கு விசாரணைகள் இடம்பெறும் ஒரு விடயம் தொடர்பாக என்னால் நாடாளுமன்றில் கருத்து கூற முடியாது.

இந்நாட்டை பொறுத்தவரை புராதனச் சின்னங்கள், நாடளாவிய ரீதியாக பல இடங்களில் காணப்படுகின்றன. பௌத்தம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதத்திற்கு இவை உரியதா என்பதல்ல பிரச்சினை.

இந்தப் புராதனச் சின்னங்களின் பெருமையை நாட்டுக்கு மட்டுமன்றி, முழு உலகிற்கும் காண்பிக்க வேண்டும். எதிர்க்கால சந்ததியினருக்கு இதனை நாம் இவற்றை பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டும்.

இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ளத் தயாராக உள்ளோம் என குறிப்பிட்டார்.