கொழும்பு - கிராண்ட்பாஸ், நாகலகம வீதி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒரு குற்றக்கும்பலினால் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கிராண்ட்பாஸ், நாகலகம் வீதி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மோதரா நிபுனா என்பவரின் இரண்டு சீடர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறில் நடந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கமைய, மேடற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில், இந்த துப்பாக்கிச் சூடு மற்றொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான சேதாவத்தே கசுங்கே என்பவரின் பிரிவினரால் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேநேரம் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 25 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 25 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதில் 16 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டவை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் மாத்திரம் இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றன.