பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டினை விட்டு வெளியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அண்மைக்காலமாக நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

சிலர் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கையினை விட்டு மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது.

அதேபோன்று உயிரினை பணயம் வைத்து படகு மூலம் அவுஸ்ரேலியா மற்றும் இந்தியாவிற்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அண்மைக்காலமாக பாரியளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே தங்களது உயிர்களை பணயம் வைத்து இவ்வாறு சட்டவிரோதமான முறையில் நாட்டினை விட்டு வெளியேற முயற்சிக்கின்றனர்.

இதற்கிடையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்களுக்கு அமைய, இந்த வருடத்தின் ஜூலை மாதத்தின் முதல் வாரம் வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் வேலை தேடி வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் மாத்திரம் 27 ஆயிரத்து 937 பேர் வேலைகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.