ஒவ்வொரு வீட்டிலும் விமானம் - சொகுசாக வாழும் மக்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கமரூன் ஏர்பார்க் என்ற சிறிய கிராமத்தில் வேலைக்கு செல்லவும், வியாபாரத்தை நடத்திச் செல்லவும் ஒவ்வொரு வீட்டிலும் விமானத்தை வைத்துள்ளனர்.

விமான ஓட்டி அனுமதிப்பத்திரம் மற்றும் விமானத்தை இயக்குவது பற்றிய முழுமையான விவரங்கள் தெரிந்தவர்களை தவிர, வேறு எவருக்கும் விமானத்தை இயக்க அதிகாரம் இல்லை.

கமரூன் ஏர்பார்க்கில் வசிப்பவர்கள் மற்றும் விமானங்களை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தொழில் ரீதியாக அல்லது ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளாக இருக்கின்றனர். இவர்களுடன் சில மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பிற மக்களும் வசிக்கிறார்கள்.

இங்கு வசிக்கும் அனைவரும் சொந்தமாக விமானங்களை வைத்திருப்பதை விரும்புகிறார்கள். கமரூன் ஏர்பார்க் கடந்த 1963-ல் கட்டப்பட்டது. இங்கே மொத்தம் 124 வீடுகள் உள்ளன.

'விமானங்கள் குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு முன்பாக தரையிறங்க மற்றும் அருகில் உள்ள விமான நிலையத்திற்கு எளிதாக செல்லவும் வசதியாக 100 அடி அகலத்திற்கு வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நகரத்தில் உள்ள வீதிகளின் பெயர்கள் கூட விமானங்களுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா விமானங்களின் செயல்பாட்டை ஊக்குவித்தது. இந்த நிலையில் தான், இந்த விமானநிலையங்களை ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளுக்கான குடியிருப்பு விமானப் பூங்காவாக மேம்படுத்த அந்நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்தது.

பொதுவாக இது போன்ற குடியிருப்பு நகரங்கள் fly-in கம்யூனிட்டிஸ் என்று அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.