அரசாங்கத்தின் புதிய விதிகளால் கைதிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன – அம்பிகா சற்குணநாதன்


சிறைச்சாலை கட்டளைச் சட்டம் கைதிகளின் உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளது என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் அரசாங்கம் புதிய விதிகளை வகுத்துள்ளது என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை வாரத்திற்கு 6 நாட்கள் பார்வையிடலாம் என்ற அனுமதி, வாரத்திற்கு ஒருமுறை என குறைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை சிறைக்குள் இருக்கவேண்டிய நேரத்தை நாளொன்றிற்கு 23 மணித்தியாலங்களாக அதிகரிப்பது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமைத்த மற்றும் சமைக்கப்படாத உணவுகளை தடைசெய்யப்பட்ட பொருட்கள் என பட்டியலிட்டால் உணவு வழங்க முடியாத நிலை கைதிகளின் உறவினர்களுக்கு ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறையில் கொடுக்கப்படும் உணவுகள் தரமில்லாத காரணத்தினாலேயே உறவினர்கள் சமைத்த உணவை வழங்குகின்றனர் என்றும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

12 மாதங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள் சிறைக்கு வெளியே வேலை செய்ய அனுமதிக்கும் விதி குறித்தும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.