ஐ.நா பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அலி சப்ரியின் மகன்!



ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்துக்கு இணையாக நடைபெறும் கூட்டங்களில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளை தயாரிக்க தமது மகன் உதவியதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

அலி சப்ரியின் மகன், அவரது அமைச்சர் சலுகைகளை பயன்படுத்தி ஐ.நாவில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பது தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்துக்கு இணையாக இடம்பெற்ற கூட்டமொன்றில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் மகன் பங்கேற்றுள்ள தொடர்பான புகைப்படமொன்று வெளியாகியிருந்தது.

இதனை தொடர்ந்து, அவரது மகன் குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதோடு அமைச்சருக்கான சலுகைகள் எவ்வாறு அவரது உறவினர்களால் பயன்படுத்தப்படுகிறது எனவும் கேள்வியெழுப்பப்பட்டிருந்தது. 

அத்துடன், ஐ.நா கூட்டத்தில் பங்கேற்க சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள் நியூயோர்க்குக்கு மேற்கொண்ட பயணத்தில் அலி சப்ரியின் மகன் ஏன் கலந்து கொண்டார் எனவும் அரசியல் வட்டாரங்கள் கேள்வி எழுப்பியிருந்தன. 

இந்த நிலையில், குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அலி சப்ரி, ஐ.நா கூட்டத்துக்கு இணையாக இடம்பெற்ற கூட்டங்களில் சமர்பிக்கப்பட்ட அறிக்கைகள் தமது மகனின் உதவியுடன் தயாரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

குறித்த கூட்டங்களின் போது பல அறிக்கைகள் சமர்பிக்கப்பட வேண்டியிருந்ததோடு தாம் பல உரைகளை ஆற்ற வேண்டியிருந்ததாகவும், அவற்றை தயாரிப்பதற்கு அரச அதிகாரிகள் அல்லது தன்னார்வாளர்களின் உதவியை தமக்கு பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த நிலையில், குறித்த நடவடிக்கைகளுக்கு தமது மகன் தனிப்பட்ட ரீதியில் பல ஆதரவுகளை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், தனிப்பட்ட ரீதியில் தமது மகன் தமக்கு வழங்கிய ஆதரவுகளுக்கு சம்பளமாக சிறிலங்கா அரசாங்கத்தின் பணம் வழங்கப்படவில்லை எனவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தன்னார்வாளராக தமது மகன் உதவியதாகவும் அமைச்சு பதவியின் சலுகைகள் எதனையும் அவர் பயன்படுத்தவில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.