அலி சப்ரிக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டும் - சபையில் சீறிய சிறிதரன் எம்.பி!



"ஆயுத கலாச்சாரம் பற்றி பேசும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டும்."

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து மீண்டுமொரு ஆயுதக் கலாசாரத்தை தமிழர்கள் தூண்டக்கூடாது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கருத்து வெளியிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழர் தரப்பில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா, குண்டு சத்தங்கள் கேட்டனவா, ஆயுதம் பற்றி அவர்கள் சிந்தித்துள்ளனரா? எதுவும் இல்லை.

தமிழர்கள் அன்று ஆயுதம் ஏந்தினர் என்பதைவிட அவர்களை ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளுனீர்கள் என்பதே உண்மை. தங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு எதிராகவும், நீதி கோரியுமே அவர்கள் சர்வதேசம்வரை சென்று நம்பிக்கையுடன் போராடிவருகின்றனர்.

ஆனால் இங்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் மீது துப்பாக்கி வைக்கப்படுகின்றது.

நீதி, நியாயத்துக்காக போராடும் ஒரு இனம் மிரட்டப்படுகின்றது. துப்பாக்கிகளை எடுப்போம், அமைதியாக அடங்கி இருங்கள் என்ற எச்சரிக்கையையே வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ளார்.

அலிசப்ரி போன்றவர்களுக்கு முதலில் புனர்வாழ்வளிக்க வேண்டும். நல்லிணக்கம் என்றால் என்ன, பொறுப்புகூறல் என்றால் என்ன என்பது பற்றி அலி சப்ரிக்கு கற்பிக்க வேண்டும்.

ஆயுத கலாச்சாரம் பற்றி அலிசப்ரி கூறிய கருத்துகளை கண்டிக்கின்றோம்.

தமிழர் விடுதலை போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு முக்கியம். அவர்களையும், தமிழக மக்களையும் ஒதுக்கிவிட்டு செயற்பட முடியாது." எனக் கூறியுள்ளார்.