வெற்றிக்கு பின் கலங்கிய அஜித் குமார்.. நெகிழ்ச்சி சம்பவம்..!


டுபாயில் நடைபெற்று வரும் 24 மணிநேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், அஜித் குமார் 414ஆம் எண் கொண்ட காரின் ஓட்டுநராக கலந்துகொண்டார். அவருக்கு 'ஸ்ப்ரிட் ஆஃப் தி ரேஸ்' விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியை அஜித் குமாரின் ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் அஜித்குமார் திரைப்படங்களில் நடிப்பதைக் கடந்து இளமைக் காலம் முதலே கார், மோட்டார் சைக்கிளில் பந்தயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

அஜித்குமார், சமீப காலமாக படப்பிடிப்பு முடிந்த காலகட்டங்களில் சர்வதேச கார் பந்தயங்களில் கலந்துகொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். திரைக்கு வரவுள்ள விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர் கார் பந்தயத்தில் பங்கெடுக்க டுபாய் சென்றார்.

இந்நிலையில் முதல்முறையாக ஒரு சர்வதேச கார் பந்த போட்டியில் பங்கேற்ற அஜித்குமார் அணி, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை அஜித்குமார் தனது அணியுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

மேலும் இதன்போது அவர் கண்கலங்கி, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார்