தடைகளைத் தாண்டி மாவீரர் நினைவுகூரல்கள் முன்னெடுப்பு


தமிழர் தாயகத்தில் மாவீரர்களை மான்பேற்றும் வகையில் நினைவுகூரல்கள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு மக்களினால் உணர்வு பூர்வமாக அஞ்சலிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

தாயக மக்கள் மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் கொண்டாட தயாராகி வரும் நிலையில் பல்வேறு நெருக்கடிகளை சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தினார் ஏற்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும் தடைகளை தாண்டி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களுக்கு மக்கள் நான்காம் நாளாக இன்றும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பருத்தித்துறையில் மாவீரர்களை நினைவு கூரும் வகையில் நினைவாலயம் அமைக்கப்பட்ட நிலையில் மக்கள் தொடர்ந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் இன்றும் மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி நிகழ்வுகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, மாவீரர் நினைவு வாரத்தை கடைப்பிடிக்கும் முகமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் துயிலுமில்ல துப்பரவுப் பணிகள், மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.