சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்ட போதும் சில வைத்தியசாலைகளில் முன்னெடுப்பு


இன்று காலை ஆரம்பிக்கப்படவிருந்த தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், தெரிவு செய்யப்பட்ட 10 வைத்தியசாலைகளில் இன்று காலை 6.30 முதல் 4 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெறவிருந்த கலந்துரையாடல் தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று மாலை வரை பிற்போடப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளரினால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இன்று காலை ஆரம்பிக்கவிருந்த காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இன்று காலை 6.30 முதல் கராப்பிட்டிய, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பேராதனை, கேகாலை, பொலன்னறுவை, திருகோணமலை, வவுனியா மற்றும் மன்னார் உள்ளிட்ட வைத்தியசாலைகளில் 4 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.