இந்தியாவின் அதானி குழுமம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
குறிப்பாக மின்சார உற்பத்தி தொடர்பில் அதானி நிறுவனம் கோரிய விலை அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு கோரிய தொகையானது ஒப்பீட்டளவில் அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு அலகு மின் உற்பத்திக்காக 8 அமெரிக்க சதங்களை அதானி நிறுவனம் கோருவதாகவும், இதனை விடவும் குறைந்த தொகையில் மின் உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
சில நிறுவனங்கள் 4 முதல் 5 அமெரிக்க சதங்களுக்கு ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக தெரிவித்துள்ளார்.
அதானி நிறுவனத்துடனான பிரச்சினையானது மின் உற்பத்தி விலை தொடர்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதானி நிறுவனமும் குறைந்த விலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கினால் அந்த நிறுவனத்திடம் ஒப்பந்தத்தை ஒப்படைக்க தயார் என மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அதானி நிறுவனம் தொடர்பில் உலக நாடுகளில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளதாகவும் சில நாடுகளில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் சில நாடுகளில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் அதானி நிறுவனத்தின் காற்றாலை திட்டத்தை மாற்றி சீனாவுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ வழங்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறான திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.
