யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வு வழங்கப்படவில்லை : ஐக்கிய நாடுகள்

யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்களாகியும், அதனூடாக பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உண்மை, நீதி மற்றும் தீர்வு கிடைக்கவில்லை, மாறாக அவர்கள் வேதனைகளை அனுபவித்து வருகின்றனர் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) தெரிவித்துள்ளார்.

ஆணையாளர் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல்களை நிறைவேற்றுவதிலிருந்து இலங்கை தொடர்ந்தும் தவறி வருவதாகவும், போர்க்குற்றங்கள், அண்மைய மனித உரிமை மீறல்கள், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றின் மூலம் பொறுப்பு கூறல்கள் மீறப்பட்டுள்ளமை நன்கு புலப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடு முன்னோக்கிச் செல்வதற்கு இந்த விடயங்கள் பாரிய தடையாக இருப்பதாகவும் அது தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட வேண்டுமென மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில் அவ்வறிக்கையில்,

“எந்தவொரு நிலைமாறுகால நீதிச் செயல்முறையும் வெற்றியடைவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கான உண்மையான முயற்சிகளால் அடித்தளம் அமைக்கப்பட வேண்டும்.

இந்த பொறிமுறையின் ஊடாக உண்மையைத் தேடுவது மட்டுமன்றி பொறுப்புக்கூறலுக்கான தெளிவான அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு மாற்றத்தை செயல்படுத்துவதற்கான அரசியல் விருப்பத்துடன் இருக்க வேண்டும்.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணைகள் மற்றும் வழக்குகளை துரிதப்படுத்தப்பட வேண்டும்” போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டடமூலம் மற்றும் ஒளிபரப்பை ஒழுங்குபடுத்தும் சட்டம் உட்பட முன்மொழியப்பட்ட புதிய சட்டமூலங்கள் தொடர்பான பல கவலைகளையும் அந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.

நல்லிணக்க முன்முயற்சிகளை முன்னெடுப்பதில் அதிபர் வித்தியாசமான தொனியை வெளிப்படுத்தியுள்ளதாகவும், உள்ளூர் மோதல்கள் மற்றும் பதற்றங்களுக்கு காரணமாக உள்ள தொல்பொருள் மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதை நிறுத்துவதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

அத்துடன், 2021 ஆம் ஆண்டில் 13 சதவீதமாக இருந்த இலங்கையின் வறுமை விகிதம் 2022 ஆம் ஆண்டில் 25 சதவீதமாக இரு மடங்கு அதிகரித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும் அதன் சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் சர்வதேச நிதி நிறுவனங்கள் உட்பட சர்வதேச சமூகம் ஆதரவளிக்கும் அதேவேளை நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் உண்மையான முன்னேற்றத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசியல் பங்கேற்புக்கான உரிமையையும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலின் மூலம் வாக்காளர்களின் சுதந்திரமான கருத்துரிமையை அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு வருடத்திற்கு முன்னர் நடைபெற்ற மக்கள் போராட்டங்கள், இலங்கையில் சிறந்த நிர்வாகத்துக்கான பார்வையை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், தற்போது அதற்கான சாத்தியங்கள் உணரப்படவில்லை எனவும் அவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.