தலைமறைவாகியிருந்த தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றில் சரண்



கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்இன்று புதன்கிழமை  காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட கொழும்பு குற்றப் பிரிவின் (சி.சி.டி) எட்டு முன்னாள் அதிகாரிகளைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிஐடிக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், பல நாட்களாக லைமறைவாக இருந்து வந்த தென்னகோனைக் கண்டுபிடிப்பதற்கான பொலிஸார் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவை நிறைவேற்றுவதைத் தடுக்க இடைக்காலத் தடை கோரி தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை 17 ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

அதனை தொடர்ந்து, தென்னகோனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் சிஐடிக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று புதன்கிழமை  காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.