அபிஷேக் சர்மா, மார்க்ரம் அதிரடி - சென்னையை துவைத்தெடுத்த ஐதராபாத்


சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

நடப்பு சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் விளையாடிய நேற்றைய ஆட்டத்தில், நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணியின் அணித்தலைவர் கம்மின்ஸ் பந்துவீச்சை தெரிவு செய்தார்.

இதனையடுத்து  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் சேர்த்தது. அதிகபட்சமாக துபே 45 ஓட்டங்கள் அடித்தார். ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார், ஷபாஸ் அகமது, உடன்கட், கம்மின்ஸ் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.


இதனையடுத்து 166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியின் ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை சென்னை பந்துவீச்சை சிதறடித்தது.

24 பந்துகளை எதிர்கொண்ட ட்ராவிஸ் ஹெட் 31 ஓட்டங்களில் வெளியேற, சர்மாவுடன் மார்க்ரம் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தனர். 12 பந்துகளை மட்டும் எதிர்கொண்ட சர்மா 37 ஓட்டங்களில் வெளியேறினார்.

மார்க்ரம் 36 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்கள் குவித்தார். தொடர்ந்து ஷஹ்பாஸ் அகமது, கிளாசன் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் தங்கள் பங்கிற்கு ஓட்டங்கள் சேர்க்க, 18.1 ஓவரில் ஐதராபாத் அணி வெற்றி இலக்கை எட்டியது. 11 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.