எரிபொருள் நிலைய மோதலில் பலியான இளைஞன்-வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்!

காலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த இளைஞன் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன சில நாட்களாக எரிபொருள் வரிசையில் காத்திருந்த கார் ஒன்றின் உரிமையாளரை சந்திப்பதற்காக அவரது நண்பர், அவரது நண்பரின் சகோதரர் மற்றும் அவரது நண்பரின் சகோதரரின் மனைவி ஆகியோர் அந்த இடத்திற்கு வந்துள்ளனர்.கார் வரிசையில் நிற்கும்போது ​​தேநீர் அருந்துவதற்காக ஹோட்டல் ஒன்றிற்கு அவர்கள் சென்றுள்ளமை தற்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் அந்த கும்பல் அந்த இடத்திற்கு திரும்பியபோது ​​காரின் முன் மற்றொரு கார் நிறுத்தப்பட்டுள்ளது.இதன்போது இரு பிரிவினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.இதன்போதே கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

காரின் உரிமையாளர் மற்றும் உயிரிழந்தவரின் சகோதரரும் காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.யட்டகல ஸ்வலுவல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் தந்தை இராணுவ அதிகாரி என்பதுடன் அவர் யுத்தத்தின்போது உயிரிழந்துள்ளார். பின்னர் 2015 இல் இளைஞனின் தாயும் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அதன் பின்னர், தனது தாயின் சகோதரியின் கீழ் கல்வி கற்ற இளைஞன் கொத்தலாவல விஞ்ஞான பீடத்தில் சிவில் பொறியியல் பட்டப்படிப்பைக் கற்று அந்த பட்டத்திற்காக காத்திருந்த வேளையில் துரதிஷ்டவசமாக உயிர் இழந்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் நாட்டை விட்டு வெளியேறப்போவதாக அவர் இறப்பதற்கு முன்னர் தெரிவித்ததாக அவரது தாயின் சகோதரி சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை காலி துறைமுக பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.