தந்தையின் பணத்தை கொள்ளையிட்டு காலி நகருக்கு சென்ற இளம் ஜோடி கைது


தந்தையில் மூன்று லட்சத்து 80 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு, பாதுக்கையில் இருந்து காலி நகருக்கு சென்றிருந்த இளம் காதல் ஜோடியை தாம் கைது செய்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுக்கையை சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவியும் கடுவலையை சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவனும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த 2 ஆம் திகதி காலி நகரில் இருந்த போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டு, அவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது இவர்கள் வீடுகளுக்கு தெரியாமல் காலிக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு காலி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பணியகம் நடத்திய விசாரணைகளில் 17 வயதான பாடசாலை மாணவனின் தந்தை வார சந்தைகளில் வியாபாரம் செய்பவர் எனவும் தந்தையுடன் சந்தைக்கு சென்றிருந்த போது, 14 வயதான மாணவியுடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டதாகவும் மாணவன் கூறியுள்ளார்.

கொத்து ரொட்டி சாப்பிடலாம் எனக்கூறி மாணவியை காலி அழைத்துச் சென்ற மாணவன்

 காலி நகருக்கு சென்று கொத்த ரொட்டி சாப்பிட்டு விட்டு வரலாம் எனக்கூறி தந்தையின் மூன்று லட்சத்து 80 ஆயிரம் ரூபாவை எடுத்துக்கொண்ட மாணவன், மாணவியுடன் காலி நகருக்கு சென்றுள்ளார்.

இவ்வாறு காலி நகருக்கு சென்றிருந்த நிலையிலேயே பொிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டு, நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.