புதிய அரசுக்கு நாட்டின் முன்னேற்றம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எந்தவொரு தவறான முடிவுகளும் நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத கடந்த கால கடின உழைப்பின் முன்னேற்றத்தை பாதிக்கலாம் என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) எச்சரித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் (X) கணக்கில் பதிவொன்றை வெளியிட்டதன் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு உதவிய சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வேலைத்திட்டத்திற்கு புதிய நிர்வாகம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 

இதேவேளை, ஜூன் 2023 க்குப் பிறகு முதன்முறையாக அமெரிக்க டாலரின் விற்பனை பெறுமதி 300 ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் படி, மிகவும் கடினமான பொருளாதார நெருக்கடிகளின் போது மேற்கொள்ளப்பட்ட லட்சிய சீர்திருத்தத் திட்டம் இப்போது பலனைத் தந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.