இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பேச்சு..! இன்று கூடும் தமிழ் - முஸ்லிம் - சிங்கள கட்சிகள்



இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் பேச்சுக்கு அழைப்பு விடுத்த அதிபர் ரணில் விக்ரமசிங்க தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களை இன்று சந்தித்துப் பேசுகின்றார்.

இந்தச் சந்திப்பின்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் பிரசன்னத்துக்கும் அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று மாலை 5.30 மணிக்கு அதிபர் செயலகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி., பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்கவுள்ளன.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், தாம் இந்தச் சந்திப்பில் பங்கேற்கமாட்டோம் என்று அந்தக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இன்று நடைபெறும் இந்தச் சந்திப்பில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்களக் கட்சிகளுக்கும் அதிபர் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.