போலி ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கையில் கடவுச்சீட்டு பெற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு (Diana Gamage) எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 04ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் (Colombo High Court) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன (Manjula Thilakaratna) முன்னிலையில் இன்றையதினம் (04.10.2024) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் சாட்சிப் பட்டியலில் மேலும் ஒரு சாட்சியை சேர்க்கத் தீர்மானித்துள்ளதாகவும், உரிய சாட்சிகளின் பட்டியலில் திருத்தம் செய்ய அனுமதி கோருவதாகவும் அரசாங்க சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி, உரிய ஆதாரப் பட்டியலில் திருத்தம் செய்ய அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சானக ரணசிங்க, இந்த வழக்கின் காட்சிப் பொருளாக பெயரிடப்பட்டுள்ள பிரதிவாதியின் பிறப்புச் சான்றிதழின் அசல் கோப்பினை விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னர் பரிசீலிக்க விரும்புவதாக நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஒரு வார காலத்திற்குள் உரிய சாட்சியங்களை நீதிமன்றில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை பாணந்துறை மற்றும் கொழும்பில் போலியான தேசிய அடையாள அட்டையை முன்வைத்து இலங்கை கடவுச்சீட்டை மோசடி செய்தமைக்காக டயானா கமகேவிற்கு எதிராக சட்டமா அதிபர் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.