ஏறாவூரில் ஆற்றில் மீன்பிடிக்க சென்ற ஒருவர் நீரில் மூழ்கி பலி!

மட்டு. ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள  குடியிருப்பு ஆற்றில் தோணி ஒன்றில் மீன்பிடிக்க சென்ற ஒருவர் அற்று நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.ஏறாவூர் மயிலம்பாவெளி துரைச்சாமி வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை சிறீதரன் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் வழமைபோல சம்பவதினமான  நேற்று புதன்கிழமை மாலை 4 மணிக்கு வீட்டில் இருந்து வெளியேறி மீன்பிடிப்பதற்காக குறித்த ஆற்றில் தோணியில் தனியாக சென்றவர் இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து  உறவினர்கள் அவரை தேடிய நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலையில் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதில் உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.