கொழும்பில் வீதித்தடை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பெருமளவு ஆர்ப்பாட்டக்காரர்கள்! பொல்லுகளுடன் தயார்நிலையில் படையினர்

 

கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொழும்பு - லோட்டஸ் வீதியில் வீதித்தடை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் ஒன்றுகூடியுள்ளனர். 

காலிமுகத்திடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று காலை முதல் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்திரளானவர்கள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் லோட்டஸ் பகுதியில் பெருமளவு படையினர் பொல்லுகள், கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் என்வற்றுடன் தயார் நிலையில் இருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 



இரண்டாம் இணைப்பு

கொழும்பு - காலிமுகத்திடலில் பதிவாகிய சம்பவத்தை கண்டித்து கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அமைதியான முறையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டித்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். 

இதேவேளை இந்த போராட்டத்தில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளனர். 


முதலாம் இணைப்பு

கொழும்பு - லோட்டஸ் வீதி சுற்றுவட்ட பகுதியில் பொது மக்கள் பலர் ஒன்றுகூடியுள்ளனர்.

குறித்த மக்கள் அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 



காலிமுகத்திடல் சம்பவம்

கொழும்பில் இன்று அதிகாலை காலிமுகத்திடல் பகுதியில் இராணுவம், பொலிஸ் விசேட அதிரடி படையினர் போராட்டப் பகுதிக்குள் பிரவேசித்து போராட்டக்காரர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

காலிமுகத்திடலில் இருந்து திடீரென சென்ற பொலிஸார்! சிறிது நேரத்தில் குவிந்த படையினர் - நேரடி ரிப்போர்ட் (Video)

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்தில் பல தரப்பினரும் தமது கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர்.