உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந்துள்ள இந்தியர்களை முதல் முறையாக ஒன்றிணைத்து ஒற்றுமை மற்றும் தோழமை உணர்வை வளர்க்கும் சர்வதேச தளத்தை உருவாக்கும் நோக்கில் இலங்கையில் உள்ள இந்திய கலாசார சங்கம் மாபெரும் அரை மரதன் ஓட்டத்தை கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த அரை மரதன் ஓட்டம் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு கடந்த புதன்கிழமை One Galle Face இல் அமைந்துள்ள HANGLA உணவகத்தில் இடம்பெற்றது.
இலங்கையில் உள்ள இந்திய கலாசார சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அரை மரதன் ஓட்டமானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி காலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் 2,375 இந்திய சங்கங்களைச் சேர்ந்த வெவ்வேறு வயதுடைய புலம்பெயர் இந்தியர்களை முதல் முறையாக ஒன்றிணைத்து ஒற்றுமை மற்றும் தோழமை உணர்வை வளர்க்கும் சர்வதேச தளத்தை உருவாக்குவதே இந்த அரை மரதன் ஓட்ட நிகழ்வின் முக்கிய நோக்கமென, இலங்கையில் உள்ள இந்திய கலாசார சங்கத்தின் தலைவர் கெப்டன் அனிர்பன் பனர்ஜி தெரிவித்தார்.
அரை மரதன் ஒரு போட்டி மட்டுமல்லாது ஆரோக்கியம், ஒற்றுமை, சமூக ஆதரவு மற்றும் நிலையான சுற்றுலாவை ஊக்குவிக்கும் ஒரு நிகழ்வாகும். அத்துடன் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிகழ்வு இலங்கையின் கலாசாரம், ராமாயண பாதை போன்றவற்றை ஆராய்வதை ஊக்குவிப்பதுடன் சுற்றுலாவை மேம்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு தனித்துவமான கலாசார அனுபவத்தை வழங்குகிறது.
ஒவ்வொரு மரதனும் ஒரு காரணத்திற்காக இடம்பெறுகின்றது. அந்தவகையில் இது உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, உலகில் தினசரி இறப்பு விகிதம் ஒரு நாளைக்கு சுமார் 150,000 பேராக காணப்படுகின்றது.
இந்த எண்ணிக்கையில், சுமார் 100,000 பேர் ஒரு உறுப்புக்காக காத்திருந்து அல்லது உறுப்பு செயலிழப்பு காரணமாக இறக்கின்றனர்.
உலக சனத் தொகையில் 0.1 வீதம் பேர் மாத்திரமே தங்கள் உறுப்புகளை தானம் செய்கிறார்கள். உடல் உறுப்புகளை சரியான நேரத்தில் தானமாக வழங்கினால் ஒவ்வொரு நன்கொடையாளரும் குறைந்தது 8 உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
அரை மரதன் போட்டி கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பித்து மெரைன் டிரைவால் சென்று காலி வீதியை அடைந்து மீண்டும் காலி முகத்திடலில் நிறைவடையவுள்ளது.
மொத்தமாக 21.0975 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாகும். பங்குபற்றுவோர் முழுமையாகவும் சவால்மிக்க ஓட்ட தூரமான 10 கிலோ மீற்றரையும் குடும்பமாக பங்குபற்றுவோர் 5 கிலோமீற்றர் ஓட்ட தூரத்தையும் கடக்க முடியும்.
அரை மரதன் போட்டியில் பங்குபற்றி ஒத்துழைப்பு வழங்கும் அனைவரையும் ஊக்குவித்து பதக்கமும் சான்றிதழ்களும் வழங்கப்படும். ஓட்டத்தூரத்தைக் கடக்கும் முதல் 3 வெற்றியாளர்களுக்கு ஆண் மற்றும் பெண் என்ற அடைப்படையில் வெற்றிக்கிண்ணமும் பணப்பரிசும் வழங்கப்படும்.
அந்தவகையில் 30 மில்லியன் பேரைக் கொண்ட இந்திய புலம்பெயர்ந்தோர் சமூகத்தால் சரியான நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதுடன் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தையும் ஊக்குவிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் இறுதியில் இந்திய கலாசார சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள அரை மரதன் போட்டி தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு இணையத்தளமொன்றும் அங்குரர்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சின்னத்துடன் ரி - சேட்டும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
அரை மரதன் போட் தொடர்பான பதிவுகளையும் ஏனைய மேலதிக விபரங்களையும் www.icainternationalmarathon.com என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை, அரை மரதன் போட்டி நடைபெறும் நாளான செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திய மற்றும் இலங்கை கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் இசை மற்றும் நடன நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.