போலி காணி உறுதியை தயாரித்து 15 ஏக்கரை அரசியல்வாதிக்கு விற்ற முன்னாள் அரச அதிகாரி


புத்தளம் மதுங்குளி பிரதேசத்தில் அமைந்துள்ள உணவிலி தோட்டத்தில் 15 ஏக்கர் நிலத்தை போலி காணி உறுதியை தயாரித்து,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளருமான பாலித ரங்கே பண்டாரவுக்கு 2 கோடியே 33 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்து மோசடி செய்த சம்பவம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஓய்வுபெற்ற பிரதிப்பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலபே பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

20 ஏக்கர் காணிக்கு போலி காணி உறுதியை தயாரித்து வங்கியில் அடகு வைத்த சந்தேக நபர்

சந்தேக நபர், போலி காணி உறுதியை தயாரித்து, பாலித ரங்கே பண்டாரவுக்கு விற்பனை செய்வதற்கு முன்னர் 20 ஏக்கர் காணிக்கு போலி காணி உறுதியை தயாரித்து, வங்கி ஒன்றில் அடகு வைத்து 47 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளை நடத்தி வரும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனியார் வங்கி ஒன்றில் அடகு வைக்கப்பட்ட 20 ஏக்கர் காணியில் 15 ஏக்கர் காணிக்கு போலி காணி உறுதியை தயாரித்து, அதனை பாலித ரங்கே பண்டாரவுக்கு விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பொலிஸ் குழுவினர் நடத்திய விசாரணைகளை அடுத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக குற்றயல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.