மூன்று வேளையும் பலாப்பழம் சாப்பிடும் குடும்பம்

பிபில ரடலியத்த கிராமத்தில் நோய்வாய்ப்பட்ட தாய் ஒருவர் பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்று பிள்ளைகளுடன் குடிசையில் வாழ்ந்து வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கணவனை இழந்து ரதலியத்த இகியங்கொட கிராமத்தில் குடிசையில் வசித்து வரும் டி.எம்.பத்மாவதி (வயது 36) தனது தாய் மற்றும் பாடசாலை செல்லும் தனது மூன்று பிள்ளைகளுடன் பல வருடங்களாக அவல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

கிராமத்தில் உள்ள ஏரிக்கரையின் அருகே விளைந்த பயிர்களை அறுவடை செய்து, ஊரிலுள்ள வீடுகளுக்கு விற்று, ஒரு நாளைக்கு 200-300 ரூபாய் சம்பாதித்து, தன் மூன்று குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறார்.

மூன்று குழந்தைகளுக்கும் ஒரு வேளை உணவு கூட கொடுக்க முடியாத நிலையில் உள்ளதால், மூன்று வேளையும் பலாப்பழத்தை மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டுவதாக அவர் தெரிவித்தார்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட போதிய உடைகள் இல்லை என்றும், இரவில் குப்பி விளக்கை ஏற்றி படிக்க மண்ணெண்ணெய் இல்லை என்றும் பத்மாவதி கூறுகிறார்.

திருமதி டி.எம்.பத்மாவதி (36) கூறியதாவது:

"கணவர் இறந்து விட்டார். அம்மா கொடுத்த நிலத்தில் நான், மூன்று குழந்தைகளுடன் குடிசையை பொலித்தீனால் மூடி வாழ்கிறோம். கழிவறை, தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் இல்லை. மழையில் நனைகிறோம். வயது வந்த பெண்கள் இந்த வீட்டில் வாழ்வது பாதுகாப்பற்றது. குழந்தைகளை காப்பாற்ற , ஏரிக்கு சென்று முகுநூல் உள்ளிட்ட புற்களை வெட்டி கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு விற்பனை செய்கிறேன்.

அரசிடம் இருந்து உதவிகள் எதுவும் வரவில்லை.குழந்தைகள் இரவில் படிக்க விளக்குகளுக்கு மண்ணெண்ணெய் இல்லை. "இதுவரைக்கும் எங்களுடைய சோகத்தைக் கேட்க யாரும் வரவில்லை. சொல்ல ஆளில்லை. எனக்கு உடல்நிலை சரியில்லை, மருந்துக்கு வழியில்லை. என் மூன்று குழந்தைகளின் படிப்புக்கு உதவி புரிந்தால் நன்று." என அவர் தெரிவித்தார்.