ரணிலுடன் ரகசிய சந்திப்பில் பசில்: மகிந்தவுக்கு எதிராக நடத்தப்பட்ட சதித்திட்டம்

அண்மைக்காலமாக அதிபர் ரணில் விக்ரமசிங்கவை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அவ்வப்போது சந்தித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னணி சமகால ஆட்சியை உறுதிப்படுத்தும் புதிய அணுகுமுறையின் ஆரம்பம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கள பத்திரிகை ஒன்று பசில் ராஜபக்சவுடன் நடத்திய கலந்துரையாடலில் திடீரென அறிவிக்கப்பட்ட உண்மைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபச்வுக்கு எதிரான கோஷசங்கள் அரசாங்கத்திற்குள் எழுந்ததாக பசில் தெரிவித்துள்ளார்.

மகிந்தவை பதவி விலக்குமாறு அதிகளவான அமைச்சர்கள் அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கடும் அழுத்தம் கொடுத்தனர்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள முடியும் என போராட்டத்திற்கு முன்னரே கணிக்கப்பட்டுள்ளதாக பசில் தெரிவித்துள்ளார்.

மேலும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு கோட்டாபய நியமித்தமை சரியானது எனவும், பதில் அதிபராக நியமிக்கப்பட்டு தற்போது அதிபராக செயற்படும் ரணில் விக்ரமசிங்கவிற்கு பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியின் மூலம் தனது அந்த முடிவு சரியானது என நிரூபிக்கப்பட்டதாக பசில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த காலகட்டத்தில் பொதுஜன பெரமுனவின் கட்சி முழுமையாக பசில் ராஜபக்சவின் தலைமை இயங்கியமை குறிப்பிடத்தக்கது.