தமிழ் மக்களுக்குள் ஆபத்தான கூட்டம் - முன்னாள் எம்.பி வெளியிட்ட தகவல்

தமிழினம் மீண்டெழக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழ் மக்களுக்குள்ளேயே ஒரு கூட்டம் நெருடிக்கொண்டிருப்பதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

தாயின் வயிற்றில் இருந்த போதே தந்தையை நாட்டுக்காக அர்ப்பணித்த மாணவன் உள்ளிட்ட மூன்று மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட கோட்டைகட்டியகுளம் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் கல்வி கற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மூன்று மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அம்பலப்பெருமாள்குளம் பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

துணுக்காய் கல்வி வலயத்திற்குற்பட்ட கோட்டைகட்டியகுளம் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையானது முல்லைத்தீவு மாவட்டத்தில் போக்குவரத்து வசதிகள் அற்ற மிகவும் அடிப்படை வசதிகள் குறைந்த பின்தங்கிய பகுதியில் உள்ள ஒரு பாடசாலையாக காணப்படும் நிலையில், இந்த மாணவர்கள் பல்கலைக்கழக தகுதி பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இங்குள்ள மாணவர்கள் வெளியிடங்களில் சென்று கற்பதில் உள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு குறித்த பாட்சாலையில் கடந்த 2016 ஆம் ஆண்டில் உயர்தர கலைப்பிரிவு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், முதன் முறையாக 2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மூன்று மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

சிறிஸ்கந்தராசா சிறிமேனகன், குணசிங்கம் சுயாந், ஜெகதாஸ் யசிந்தன் ஆகிய மாணவர்களே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.