வாள்வெட்டில் முடிந்த கிரிக்கட் விளையாட்டு - மூவர் படுகாயம்

கல்முனை தலைமையக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரைப்பள்ளி வீதியில் கிரிக்கட் விளையாட்டினால் ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தொடர்ச்சியாக கடற்கரைப்பள்ளி வீதியை ஊடறுத்து செல்லும் குறுக்கு வீதியில் சில இளைஞர்கள் ஒன்றிணைந்து பாதசாரிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வண்ணம் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுவது வழமை.

இந்நிலையில் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபடும் நபர்களால் தொடர்ச்சியாக அப்பகுதியில் இடையூறு ஏற்பட்டு வந்தள்ளது. இதனை நிறுத்துமாறு அருகில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் கிரிக்கெட் விளையாடியவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் இங்கு கைலப்பு ஏற்பட்டு வாள் வெட்டு தாக்குதல் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அருகில் இருந்தவர்கள் குறிப்பிட்டனர்.

இம்மோதலினால் 3 பேர் காயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பான விசாரணைகளை கல்முனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.