வாக்காளர் ஒருவருக்கு 109 ரூபாவையே வேட்பாளர் செலவிட முடியும் : வர்த்தமானி வெளியானது


ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தமது பிரசார பணிகளின் போது, வாக்காளருக்காக செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
 
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
 
இதன்படி, தேர்தல் பிரசாரத்தின் போது ஒரு வாக்காளருக்காக வேட்பாளர் ஒருவர் 109 ரூபாவையே செலவிட முடியும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களுக்கிடையே இடம்பெற்ற நிலையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
 
இதன்படி, வேட்பாளர் ஒருவரின் மொத்த செலவினமாக 186 கோடியே 82 இலட்சத்து 98 ஆயிரத்து 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் அடுத்த மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர்,

இவ்வருட உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு அண்ணளவாக 27 அங்குல நீளம் கொண்டது.

அத்துடன், அரச நிறுவனங்களுக்கு தபால் மூல வாக்குகள் விநியோகம் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 7 இலட்சத்திற்கும் அதிக வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளும் அடங்குவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் தபால் வாக்குகளைக் குறிக்கத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பு செப்டம்பர் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.