பொலிஸ் அவசர பிரிவிற்கு சென்ற அழைப்பு! தாயொருவரை கடுமையாக எச்சரித்த பொலிஸார்


தம்புள்ளை பிரதேசத்தில் மூன்று வயது குழந்தையொன்று தூங்கவில்லையென தாய் ஒருவர் பொலிஸ் அவசர பிரிவிற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடு செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

அவசர பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் இருவர் முறைப்பாடு கிடைக்கப்பெற்ற உடன் பதினைந்து கிலோ மீற்றர் தூரம் அமைந்துள்ள வீட்டிற்கு நள்ளிரவில் சென்றுள்ளனர்.

இதன்போது வழங்கப்பட்ட தகவலின் படி பொலிஸார் வீட்டிற்கு சென்ற போது வீட்டிலிருந்து யாரும் நீண்ட நேரம் வெளியே வராமல் பின்னர் பெண் ஒருவர் வெளியே வந்துள்ளார்.

குறித்த பெண்ணிடம் முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது தனது மூன்று வயது குழந்தை குடும்பத்தில் உள்ளவர்களையும், தன்னையும் தூங்காமல் துன்புறுத்தியதால் குழந்தையை மிரட்டுவதற்காக இவ்வாறு அழைப்பினை மேற்கொண்டுள்ளதாக பதிலளித்துள்ளார்.

இவ்வாறான பொறுப்பற்ற செயல்களினால் பொலிஸாரின் நேரமும், பொதுமக்களின் பணமும் வீண் விரயமாவதாக தாயாரை கடுமையாக எச்சரித்த பொலிஸார், எதிர்காலத்தில் இவ்வாறான செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரித்து சென்றுள்ளனர்.