குறுகிய காலம் சண்டை நிறுத்தம் தேவை - வெளியாகிய எச்சரிக்கை

நாட்டிற்கு குறுகிய காலம் சண்டை நிறுத்தம் தேவை என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கைக்கும் பங்களிக்காமல் இருப்பது அனைவரின் முழுமையான பொறுப்பு என்று சமூக நீதிக்கான தேசிய இயக்க தலைவர் கரு ஜெயசூரிய கோரியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தீர்மானித்த போதிலும் எடுக்க வேண்டிய சில அடிப்படைத் தீர்மானங்களை நாடாளுமன்றம் எடுக்கத் தவறியுள்ளது.

இது குறித்து தாங்கள் மிகவும் அதிருப்தியடைவதாக கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். குறிப்பாக 2022-2024 காலப்பகுதியில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நான்கு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

மாகாண சபைகள், உள்ளூராட்சி தேர்தல்கள், ஜனாதிபதித் தேர்தல்கள் மற்றும் பொது தேர்தல்கள் என்பனவே நடத்தப்பட வேண்டியுள்ளன. எனினும் ஒரு நாடு என்ற ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகளுக்கு விடை காணப்படவில்லை.

இதுவரை திட்டமிட்டபடி நடத்தப்படாத மாகாணசபைத் தேர்தல்கள் மற்றும் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய சில அடிப்படை முடிவுகளை எடுப்பதற்காக, 2022ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அது இன்னும் தேவையான முடிவுகளை எடுக்க முடியவில்லை. இது போன்ற பல பொறுப்புகள் நாடாளுமன்றத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பதை அழுத்தமாகச் சொல்ல வேண்டும்.

இவ்வாறான நிலையிலும் கூட, இந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு நாடாளுமன்றத்தின் ஊடாகவே தீர்வுகளை காண வேண்டிய அவசியம் உள்ளது. இதன்படி, தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதன் மூலமோ அல்லது நாட்டை முடக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமோ எந்தவொரு தீர்வையும் காண முடியாது.

அனைத்து சவால்களையும் ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் வெல்ல வேண்டும். அத்துடன் இன்று நாம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை உருவாக்குவதற்கு அடித்தளமிட்ட நிறைவேற்று அதிபர் முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மையான சமூகத்தினரின் கருத்தாகும். அதற்காக சூழலைத் தயாரிக்கும் பொறுப்பு நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் நிலவும் ஊழலைக் கையாள்வதுடன், கொள்ளையடிக்கப்பட்ட பெரும் செல்வத்தை மீட்கும் பொறுப்பும் மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முரண்பாடு காரணமாக பல உயிர்களும் தேசிய வளங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் நிமல் அமரசிறியின் திடீர் மரணம், அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்தமை மனவேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் பொது மக்களின் தேசியக் கடமையாகும். எனவே ஒட்டுமொத்த தேசமும் விரும்பும் அந்த இலக்கை அடைய, ஒன்றுபட வேண்டும்.

குறைந்த பட்சம் குறிப்பிட்ட குறுகிய காலத்திற்காவது அனைவரும் கூட்டாகச் செயல்பட வேண்டும். எந்தவொரு செயலுக்கும் பங்களிக்காமல் இருப்பது ஒரு முழுமையான பொறுப்பாக கருதப்பட வேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்க தலைவர் கரு ஜெயசூரிய கோரியுள்ளார் .