உயிரிழந்த நிலையில் இளைஞர்களால் ஒப்படைக்கப்பட்ட 15 வயது சிறுமி


கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் 15 வயது சிறுமி ஒருவரை சுகயீனம் கூறி ஒப்படைத்த இரு இளைஞர்கள் சிறுமி உயிரிழந்தமையடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்றையதினம் குறித்த இளைஞர்கள் இருவரும் சிறுமியொருவரை மகிழுந்தில் அழைத்து வந்து சுகயீனம் எனக்கூறி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது சிறுமியை உடனடியாக சோதனை செய்த வைத்தியர்கள் சிறுமி எற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்த நிலையில், இளைஞர்கள் இருவரும் திடீரென காணாமல்போயுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறுமி உயிரிழந்ததை அறிந்ததும், உடனடியாக இளைஞர்கள் மகிழுந்தில் வைத்தியசாலை வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளமை பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி சுமார் 15 வயதுடையவர் எனவும், முகத்திலும், உடலிலும் அடிபட்டது போன்று காயங்கள் காணப்படுவதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை காவல்துறையினர் வைத்தியசாலை வளாகத்தின் பாதுகாப்பு கமரா அமைப்பின் உதவியுடன் காருடன் மாயமான இரு இளைஞர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.