இலங்கையில் 90 வீதமானவர்கள் கள்வர்களாம்

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கடந்த செவ்வாய்க்கிழமை (23) டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவு தங்கத்துடன் கைது செய்யப்பட்டார்.

அன்றைய தினம், 91 ஸ்மார்ட்போன்கள் அடங்கிய 70 மில்லியன் ரூபா பொருட்களுடன், மொத்தம் 3.5 கிலோ எடையுள்ள அறிவிக்கப்படாத தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கும் வருவாய் பணிப் படை (RTF) இயக்குனரகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கடத்தல் வழக்கில் பிடிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கடந்த வருடம்(2022)மே மாதம் வெளியிட்ட காணொலியொன்று தற்போது சமூக வலைத்தளதில் வைரலாகி வருகிறது.

அக்காணொலியில் ரஹீம் தெரிவித்ததாவது, “குறிப்பிட்ட ஒருவரை கள்ளன் என்று கூறுவதற்கு இந்த நாட்டில் 90 % மானோருக்கு தகுதி கிடையாது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கயவர் என்று கூறுவதற்கும் தகுதி கிடையாது.

அதுபோல முன்னைய அரசாங்கத்திலிருந்த கோட்டாபய, ரிஷாத், மகிந்த மற்றும் சஜித் ஆகியோரை கள்ளர் என்று கூறுபவர்களும் கள்ளர்களே.

அதுபோல, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றம் வருவதற்கு முன்னிருந்த நிலையும், நாடாளுமன்றத்திற்கு வந்த பின் இருக்கும் நிலையையும் பார்க்கும் போது இப்போதுதான் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்.

மக்களும் கள்ளர். அரசியல்வாதிகளும் கள்ளர். இதுதான் யதார்த்தம்” எனப் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கருத்து வெளியிட்ட அலி சப்ரி ரஹீம் தற்போது தானே கடத்தல் வழக்கில் பிடிப்பட்டுள்ளார்.

இந்தக் கருத்துக்காக இலங்கை மக்களிடம் ரஹீம் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என விமர்னங்கள் முன்வைக்கப்பட்டு வரும்நிலையில், அலி சப்ரி ரஹீமின் பதில் என்ன?

தங்க கடத்தல் தொடர்பாக ரஹீம் குறிப்பிடுகையில்

“நான் தங்கம் கடத்தவில்லை. என்னுடன் வந்த மிராஜ் என்பரே தங்கம் கடத்தினார். அவர் எனக்கு விசுவாசமானவர்.

டுபாயில் இருந்து வருவதற்கான தயார்ப்படுத்தல்களை செய்யும் போது அவர்தான் என்னுடைய பைகளையும் கட்டினார்.

அப்போதுதான் இவ்வாறான வேலையை செய்திருக்கிறார். இது நான் முற்றிலும் எதிர்பார்காத ஒரு நம்பிக்கை துரோகம் .

அவரை நம்பியது என்னுடைய தவறு. அதனால் தான் தண்டபணம் செலுத்தினேன்” எனக் கூறியுள்ளார்.

இவர் இவ்வாறு கூறினாலும்,  நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அலி சப்ரி ரஹீமை பதவி விலகுமாறு கோருவதற்கான தீர்மானத்தை கொண்டு வருவது தொடர்பில், நாடாளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழு கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.