கொடூரமாக கொல்லப்பட்ட 9 வயதுச் சிறுமி - காவல்துறை வெளியிட்ட மேலதிக தகவல்கள்


களுத்துறை மாவட்டத்தின் அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயதுச் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நான்கு காவல்துறை குழுக்களின் ஊடாக இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

களுத்துறை பண்டாரகம, அட்டுல்கமவில் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் 9 வயதுச் சிறுமியின் மரணத்திற்கு நீதியைப் பெற்றுத் தருவதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உறுதி அளித்துள்ளார்.

இந்தக் கொடூரமான குற்றம் தொடர்பில் விரைவான நடவடிக்கையை துரிதப்படுத்துவதாகவும் டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்ட அரச தலைவர் மேலும் கூறியுள்ளார்.

உணர்வற்ற முறையில் கொல்லப்பட்ட பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்திற்கு தனது இதயப்பூர்வமான அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவிப்பதாக அரச தலைவர் கூறியுள்ளார்.

தரம் நான்கில் கல்வி கற்கும் ஒன்பது வயதான பாத்திமா ஆயிஷா, வீட்டிற்கு அருகில் உள்ள கடையொன்றுக்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சென்றிருந்தார்.

எனினும் சிறுமி வீடு திரும்பாததை அடுத்து சிறுமியின் தாயார், பண்டாரகம காவல்துறை நிலையத்தில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து மேற்கொண்ட தேடுதலின் போது வீட்டிற்கு அருகில் புதர்கள் நிறைந்த சேற்றுப் பகுதியில் இருந்து குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 20 பேரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ள போதிலும், குழந்தையின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் சரியான தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை என அவர் கூறியுள்ளார்.

சிறுமியின் சடலம் பாணந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்தூவ மேலும் தெரிவித்தார்.