சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 8 பேர் கைது!

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற சிறுவர்கள் உட்பட 8 பேர் கடற்படையினரால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு பேசாலை- தலைமன்னார் கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரின் விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதிற்கு மேற்பட்ட 3 இளைஞர்களும் பெண்களும், 18 வயதிற்கு குறைவான 3 சிறுவர்களும் இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யபட்டவர்கள் வவுனியா, திருகோணமலை மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் கடற்படை ஊடாக பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பேசாலை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நேற்று புதன்கிழமை மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 18 வயதிற்கு மேற்பட்ட 5 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையிலும், ஏனைய 18 வயதுக்கு குறைந்த 3 பேரையும் நிபந்தனைகள் இன்றி விடுதலை செய்தார்.மீண்டும் குறித்த விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.