இன்று முதல் நாளாந்தம் 600 முதல் 800 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் உற்பத்தி - மண்ணெண்ணெய்காக காத்திருப்போருக்கு ஆறுதல் செய்தி!


விமான எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக இலங்கை வந்துள்ள பல சர்வதேச விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதனால், சுத்திகரிப்பு நிலையப் பணிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளமையினால் அது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் அதன் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் நாளாந்தம் 600 முதல் 800 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் மற்றும் விமானத்திற்கான எரிபொருளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த டீசல் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து டீசல் உற்பத்தி செய்ய முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த மார்ச் 21ஆம் திகதி மூடப்பட்டது. ஆகவே தற்போது இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் தொடங்கப்படுவதால், மின் உற்பத்திக்கான மண்ணெண்ணெய் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் உட்பட எரிபொருட்களை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். இதன் காரணமாக சில இடங்களில் பல நாட்கள் காத்திருந்தும் மண்ணெண்ணெய் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் அதன் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளமையினால் எரிபொருளுக்கான நீண்ட வரிசை நீங்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.