இலங்கையில் 26 நாட்களில் 6 பேர் பலி : யார் காரணம்?

இந்த வருடத்தின் கடந்த 26 நாட்களில் அதிகவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அதிவேக நெடுஞ்சாலைகளில் நடந்த விபத்துகளில் 5 பேர் மட்டுமே உயிரிழந்துள்ள நிலையில் 26 நாட்களில் 6 பேர் உயிரிழந்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் போது பாதைகளில் வாகனங்களுக்கு இடையில் சரியான இடைவெளியை பேணாதது பல விபத்துக்களை ஏற்படுத்துவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, அதிவேக நெடுஞ்சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள பல தெருவிளக்குகள் மற்றும் நெடுஞ்சாலை மாற்றுப்பாதைகள் செயலிழந்து அப்பகுதிகள் இருள் சூழ்ந்துள்ளமையும் விசாரணையின் போது அவதானிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் இரகசியமான முறையில் மின்சார கம்பிகளை அறுத்து இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேநேரம் சாரதிகள் விதிமுறைகளை மீறி செயற்படுவதனாலேயே அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகளவான விபத்துகள் ஏற்படுவதாக போக்குவரத்து, ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலையில் விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு வரையிலான நெடுஞ்சாலைப் பகுதியில் மின்விளக்குகளை பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விசேட வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் தற்போது விபத்துகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து, ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம் நாட்டில் பொலிஸாரின்  இலஞ்ச ஊழல்களே, குற்றச் செயல்கள் மற்றும் விபத்துக்களுக்கு காரணம் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த மற்றும் அவருடைய பாதுகாவலர் உயிரிழந்ததோடு நேற்று இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்மை குறிப்பிடத்தக்கது.