ரஷ்ய இராணுவத்தில் இணைந்துக் கொண்ட 59 இலங்கையர்கள் உயிரிழப்பு : யாழ். இளைஞர்கள் தொடர்பில் தகவல் இல்லை



ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்களில் 59 பேர்  உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத்  குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர்,

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கடந்த அமர்வில்  ரஷ்ய  இராணுவத்தில் இணைந்துக் கொண்ட இலங்கையர்கள் குறித்து கேள்விகளை முன்வைத்திருந்தார். அதற்கான பதிலை முன்வைக்கிறேன்.

2025.01.20 ஆம் திகதியன்று  ரஷ்யாவுக்கான இலங்கை தூதரகத்தின் ஊடாக கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய, ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைந்துக் கொண்டுள்ளார்கள்.

பலவந்தமான முறையில் இலங்கையர்கள் எவரும் ரஷ்ய இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படவில்லை என ரஷ்ய தூதரகம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.  
அத்துடன் இராணுவத்தில் இணைந்துக் கொண்ட இலங்கையர்களில் 59 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் பெயர், விபரங்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துக் கொண்டுள்ள இலங்கையர்கள் அவர்களின் குடும்பத்தாருடன்   தொடர்புக் கொள்வதற்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க ரஷ்ய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளோம்.

நாட்டுக்கு வருகைத் தருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளவர்களை  அழைத்து வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில்  பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்,  

குறிப்பாக  அதிர்ஷ்ட ராஜா கேமஸ் விதூஷன் - யாழ்ப்பாணம், பகிரதன் - கரவெட்டி, சுந்தரலிங்கம் பாலச்சந்திரன் - முல்லைத்தீவு, பிரதாப் - யாழ்ப்பாணம், சிவேஸ் - யாழ்ப்பாணம், ஆகியோர் முகவர்களால்  ஏமாற்றப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக சேர்க்கப்பட்டுள்ளதாக அவர்களின் குடும்பத்தார் குறிப்பிடுகின்றனர்.
அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு உதவி கோருகிறார்கள். அதேபோல் 2022.10.20 ஆம் திகதி  ரஷ்யா - பெலராஸ் எல்லையில் விஜயகுமார்  முகுந்தன்  என்பவர்   காணாமல் போயுள்ளார். இவருக்கு நேர்ந்தது என்னவென்பது இதுவரை தெரியவில்லை. இவரை பற்றியும் ஆராய வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய வெளிவிவகாரத்துறை அமைச்சர்,

 குறித்த விடயங்களை சமர்ப்பியுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.