ஜனாதிபதி தேர்தல் களத்தில் 40 பேர் - நிறைவிற்கு வந்தது கட்டுப்பணம் செலுத்தும் செயற்பாடு

 

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்று  நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

அதன்படி இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் ஜூலை 26 ஆம் திகதி ஆரம்பமாகி இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

அதற்கிணங்க  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 21 பேருக்காகவும், மற்றொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர் சார்பிலும், 18 சுயேச்சை வேட்பாளர்கள் சார்பிலும் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

   

இந்தநிலையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷவிற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அவர் சார்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்  கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

இதேவேளை எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் சார்பில் ஜனக ரத்நாயக்க நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.

எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் நிஹால் பிரேம குமார தேசப்பிரிய இன்று  ஜனக ரத்நாயக்கவுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார்.

 ஜனக ரத்நாயக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக சில காலம் பணியாற்றியிருந்தார்.


இதனிடையே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை வழங்க உள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் இணைந்துகொண்டமைக்கான உடன்படிக்கையும் இன்று  கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரட்ன டில்ஷான் தீர்மானித்துள்ளார்.
 
இதன்படி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
 
இதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியின் பேருவளை தொகுதி அமைப்பாளராக திலகரட்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை நாளையத்தினம் ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் இடம்பெறவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நாமல் ராஜபக்ச வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் கட்சியால் முன்வைக்கப்பட வேண்டும் என்பதே அக்கட்சியில் உள்ள பலரது நிலைப்பாடாக இருந்தது.

இதனிடையில் கட்சி தமக்கு வேட்புமனுவை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வர்த்தகர் தம்மிக்க பெரேரா முன்னர் தெரிவித்தார்.

ஆனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஆகஸ்ட் 06 ஆம் திகதி செய்திகள் வெளியாகின.

இதன்படி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக  நாமல் ராஜபக்ஷவின் பெயர் ஆகஸ்ட் 7 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.


இதனிடையே சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர தனது வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

பொரளையில் உள்ள மவ்பிம ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போதே  திலித் ஜயவீர தனது வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

இதன்போது, சர்வஜன அதிகாரத்தின் கட்சித் தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, டியூவ் குணசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிந்து குமாரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும், சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளருமான  திலித் ஜயவீரவுக்கான கட்டுப்பபணம் நேற்று செலுத்தப்பட்டது.

இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ இன்று காலை வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

மகாசங்கத்தினரின் ஆசீர்வாதத்திற்கு மத்தியில் விஜயதாச ராஜபக்ஷ, நாவலையில் உள்ள அவரது வீட்டில் வைத்து வேட்புமனுவில் கையொப்பமிட்டார்.

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக, பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் கட்டுப்பணத்தை செலுத்தினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடவுள்ளதாக ஆரம்பத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சஜித் பிரேமதாசவுக்கு மைத்திரிபால சிறிசேனா ஆதரவளிப்பாரா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, அதற்கு பதிலளித்த விஜயதாச ராஜபக்ஷ,

 
அப்படி ஒரு செய்தி உள்ளது. அவருடைய ஆதரவு கிடைக்கும். கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன். இல்லை என்றால் வருவதற்கு முகம்கொடுப்பேன் என்றார்.


இதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல கட்சிகளுடன் இணைந்து "பொதுஜன ஐக்கிய முன்னணி" என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது.
 
இன்று  கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கூட்டணியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
 
பொதுஜன ஐக்கிய முன்னணியானது ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான முற்போக்கு, இடதுசாரி அரசியல் கட்சிகளின் கூட்டினால் உருவாக்கப்பட்ட கூட்டணியாகும்.
 
இதன்படி, ஐக்கிய மக்கள் முன்னணியின் பல்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.