திடீரென களமிறக்கப்பட்ட 35000 பொலிஸார் : சிவில் உடையில் புலனாய்வு பிரிவு

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

குறிப்பாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில், சிவில் உடையில் புலனாய்வு பிரிவு அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு பகுதியில் பாதுகாப்புக்காக போக்குவரத்து பொலிஸார் உட்பட சுமார் 6,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
 
இதேநேரம் ஏப்ரல் 15ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினமாக இதுவரை தீர்மானிக்கவில்லையென அரச நிர்வாக, மாகாணசபை, உள்ளூராட்சி மன்ற அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைத்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

ரவி கருணாநாயக்க தனது கேள்வியின்போது,

எதிர்வரும் 15ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினமாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பிரசுரமாகி இருக்கிறன. அதேபோன்று இது தொடர்பில் அரச ஊழியர்கள் பலரும் தெளிவில்லாமல் இருக்கின்றனர். அதனால் இதுதொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர்,


ஏப்ரல் 15ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினமாக இதுவரை தீர்மானிக்கவில்லை. அந்த வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமை பெரிய வெள்ளிக்கிழமை என்பதால் அந்த வாரத்தில் பணியாற்றுவதற்கு மூன்று நாட்கள் மாத்திரமே இருக்கின்றன. அதனால் 15ஆம் திகதி அரச விடுமுறை தினமாக இதுவரை தீர்மானிக்கவில்லை. என்றாலும் எதிர்வரும் நாட்களில் இதுதொடர்பில் கவனம் செலுத்த நடவடிக்கை எடுப்போம் என்றார்.