நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7323 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரத்து 228 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சீரற்ற காலநிலையால் 3 பேர் காயமடைந்துள்ளதுடன் 554 குடும்பங்களைச் சேர்ந்த 1852 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் 164 வீடுகள் பகுதிளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக நீர் தேக்க பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் தற்போது 5 அடி உயர்ந்துள்ளதுடன், காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது.
அத்துடன் ஏனைய நீர் தேக்கங்களான கென்யோன், லக்சபான நவலக்சபான பொல்பிட்டிய கலுகல விமலசுரேந்திர மற்றும் மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து சீரற்ற காலநிலை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள், பண்ணையாளர்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை ஆரம்பித்து இரண்டாம் நாளில் மாணவர்களின் வருகை மிகவும் குறைந்த நிலையில் உள்ளது.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான காற்று வீசுவதால் வாழை மற்றும் ஏனைய மரங்கள் முறிந்து உள்ளன.
நோட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் ஆங்காங்கே மண் திட்டுகள் சரிந்து விழுந்ததுள்ளது.
இப் பகுதியில் கடுமையான மழையுடன் பனி மூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் வலய போக்குவரத்து பொலிஸ் அதிகாரி பணித்துள்ளார்.
இதேவேளை தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்றும் நாளையும் (22) மூடுமாறு வடமேற்கு ஆளுநர் அஹமட் நசீர் (யுhயஅநன யேணநநச) வடமேற்கு கல்வி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக பெருமளவான பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், சுமார் 100 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு பாடசாலைகளை மூட ஆளுநர் தீர்மானித்துள்ளார்.
இதேவேளை, நிலவும் மழையுடனான வானிலையினால் எதிர்நோக்கும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் தமது செயற்பாட்டு அறைக்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
அத்தோடு, சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் வலயத்தில் 213 பாடசாலைகளும் சிலாபம் வலயத்தில் 158 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் பல ஆறுகளின் நீர் மட்டம் தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களம் மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன் படி, களு கங்கையின் மகுர பகுதியில் நீர் மட்டம் குறைந்து வருகின்ற போதிலும், ஆபத்து இன்னும் உள்ளதாக தெரிவிக்கின்றது.
களு கங்கையின் மில்லகந்த பகுதியில் நீர்மட்டம் மேலும் அதிகரித்து சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஜிங் கங்கையின் பத்தேகம பகுதியில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நில்வலா ஆற்றின் தல்கஹகொட மற்றும் பனடுகம பகுதிகள் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளன.
அத்தனகலு ஓயாவின் சிறு வெள்ள நிலைமை படிப்படியாக குறைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இதேநேரம் கனமழை மற்றும் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரை காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் கடற்பரப்பு அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
மறு அறிவித்தல் வரும் வரை இந்த கடற்பகுதியில் கடற்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.