6 நாட்களில் 24 பேர் உயிரிழப்பு! 48 மணித்தியாலங்களுக்கு தொடரும் அபாயம்..! நோய் பரவல் குறித்தும் எச்சரிக்கை

வெள்ளம் படிப்படியாக குறைவடைந்தாலும் சில இடங்களில் வெள்ளத்தின் தாக்கம் தொடரும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது..


அதன்படி கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கைக்கான வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

களனி கங்கையின் நீர்மட்டம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதுடன், களுகங்கையின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெள்ள நிலைமையுடன் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், அது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளுக்கு தேவையில்லாமல் செல்வதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களை புனரமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த முதலாம் திகதி முதல் பெய்து வந்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் 24 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது

இதன்காரணமாக 50,000இற்கும் அதிகமானோர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்

அத்துடன் கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.

மேலும் உயிரிழந்தவர்களில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவதானிக்கச் சென்றவர்களும் அதிகளவில் அடங்குவதாகவும், இவ்வாறாக அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் குறித்த பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேநேரம் நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரியுள்ளது.