24 மணிநேர சேவையாக மாற்றப்படும் யாழ் பேருந்து நிலையம்!

வட பகுதியின் போக்குவரத்து மையமாகவும் நாளாந்தம் பல ஆயிரக் கணக்கான பொதுமக்கள் தமது போக்குவரத்து தேவைக்கான மையமாகவும் பயன்படுத்தி வரும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் இன்றுமுதல் 24 மணி நேர சேவையை வழங்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிராந்தியத்தின் செயலாற்று முகாமையாளர் லம்பேட்ட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கடந்த யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடற்றொலில் அமைச்சரும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் 24 மணிநேர சேவையை ஏற்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு கோரிக்கைக்கு முன்வைக்கப்பட்டது.

அதற்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினரது கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்றதன் அடடிப்டையில் குறித்த நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனடிப்படையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் இன்று முதல் (01) யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் புதிய மைல் கல்லில் அடியெடுத்து வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கொழும்பு உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தை யாழ் மாவட்டத்தில் இருந்து மையப்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை தமது சேவைகளை முன்னெடுத்து வருகின்றது.

அத்துடன் காலாகாலமாக பகல் வேளைகளிலும் இரவில் ஆகக் கூடுதலாக 10 மணிவரையிலான காலப்பகுதிக்கான அட்டவணை நிரலின் அடிப்படையில் தமது சேவையை மேற்கொண்டு வந்த யாழ் மத்திய பேருந்து நிலையம் இன்றுமுதல் தனது சேவையை 24 மணிநேரமும் மேற்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக நேரக் கணிப்பாளர்கள் மற்றும் ஆளணிகள் குறித்த சேவைக்காக நியமிக்கப்பட்டு இன்று 01.09.2023 ஆம் திகதி முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் தூர இடங்களில் இருந்து வரும் பயணிகள் இதுவரை காலமும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்த நிலையில் அதற்கான தீர்வு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளதுடன் தமது பயணங்களை இலகுவாகவும் தடைகளின்றியும் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.