பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண கொண்டாட்டத்தில் இலங்கை மின்சார சபையிடமிருந்து 20 இலட்சம் ரூபாய்க்கு அதிகம் மதிப்புள்ள மின்சாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மனுவை, தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்பறையில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்காக இலங்கை மின்சார சபைக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியதன் மூலம் இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த மனுவை சட்டத்தரணி விஜித குமார தாக்கல் செய்துள்ளார்.
இதில், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட ஒரு குழு பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று முன்தினம் தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதிபதி அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
இலங்கை மின்சார சபையின் அசாதாரண நடவடிக்கை இலங்கையில் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்று நீதிமன்றத் தீர்ப்பைக் கோரி சட்டத்தரணி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இதேநேரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் நாரஹேன்பிட்ட இல்லத்திற்கு இரகசியமாக விஜயத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜி.எல். பீரிஸின் அழைப்பின் பேரில் நாமல் ராஜபக்ச அங்கு சென்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம், சனிக்கிழமை மாலை, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் குழு ஒன்று ஜி.எல். பீரிஸின் இல்லத்திற்குச் சென்றது.
அதன்போது தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கேட்ட கேள்விகளுக்கு நாமல் ராஜபக்ச சிறப்பாக பதிலளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பங்களிப்பை எவ்வாறு பெறுவது மற்றும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அவர்களின் திட்டங்கள் குறித்தும் நாமல் ராஜபக்ஷ நீண்ட நேரம் கலந்துரையாடியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.