நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலவும் சீரற்ற வானிலையால் 2 பேர் உயிரிழந்ததுடன், பல்வேறு இயற்கை அனர்த்தங்களினால் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக நேற்று இரவு மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை பிரதேச செயலகப் பிரிவின் மலபட்டாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வலப்பனையில் இருந்து ஹகுரான்கெத்த வழியாக கண்டி செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய பதுளை – பாததும்பர,பன்வில, மெததும்பர குருணாகல் – ரிதிகம மாத்தளை – லக்கலை, பல்லேகம, நாவுல, பல்லேபொல ஆகிய பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கண்டி – உடுதும்பர, தொலுவ மாத்தளை – இரத்தோட்டை, வில்கமுவ , யட்டவத்தை, உக்குவளை ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் நாட்டின் சில இடங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அந்தவகையில், கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மலைகளின் கிழக்கு சரிவுகள் மற்றும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.