இலங்கையில் கொரோனா தொற்றால் 2 பேர் பலி, புதிதாக பரவும் நோய்கள் குறித்து அவசர எச்சரிக்கை



நாடு முழுவதும் பரவி வரும் கொவிட் தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் சுவாச நோயாளிகளில் 9 முதல் 13 சதவீத வரை தற்போது புதிய கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்த அவர்,


இந்த கொவிட் தொற்று மிகக் குறைந்த தீவிர நிலையில் உள்ளது. தீங்கு விளைவிக்கும் விளைவுகள் மிகக் குறைவாகும்.


எனினும், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு, இது தீவிரமாக இருக்கலாம்.


அவ்வாறானவர்களே இதைப் பற்றி கவலைப்பட வேண்டும். இலங்கையில் இரண்டு மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இருவரும் உடல் நிலையில் சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்களாகும்.


அதனை தவிர, தற்போது எங்களுக்கு ஒரு தீவிரமான சூழ்நிலை இல்லாததால் தேவையற்ற அச்சமடைய தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதேநேரம் டெங்கு மற்றும் சிக்குன்குனியாவுடன் தொடர்புடைய வலி நிவாரணத்திற்கு பரசிட்டமோல் மாத்திரம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவுறுத்தலை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.

அத்துடன் இந்த ஆண்டு இதுவரை 25 ஆயிரத்து 505 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசகர் சமூக மருத்துவர் பிரஷிலா சமரவீர கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் வைத்து கூறியுள்ளார்.

இதேவேளை நிலவும் மழையுடனான வானிலையால் சுவாச நோய்கள் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுவாச நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானம் தொடர்பான விசேட வைத்தியர் அத்துல லியனபத்திரன பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.


காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது பொருத்தமானதென அவர் கூறியுள்ளார்.


சுவாச நோய்கள் ஏற்பட்டுள்ள எந்தவொரு தரப்பினரும் மூச்சு விடுவதில் சிரமம் காணப்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேநேரம் நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தே அதிக நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் துஷானி தபரேரா தெரிவித்தார்.
 
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

இந்த நோய் ஒரு பாக்டீரியாவால், குறிப்பாக பாலூட்டிகளின் சிறுநீர் வழியாகப் பரவுகிறது. உண்மையில், இந்த பாக்டீரியா எலிகளின் சிறுநீர் அமைப்பில் வாழ்கிறது. எலிகள் தண்ணீர் குடிக்கும்போது, அவற்றின் சிறுநீர் தண்ணீரிலோ அல்லது மண்ணிலோ கலக்கிறது. நாம் அந்த மண் அல்லது தண்ணீரை பயன்படுத்தும் போது, மக்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மாவட்ட ரீதியாக இந்த நோயாளிகள் பெரும்பாலும் இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் காணப்படுகிறார்கள். அதே நேரத்தில், பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பற்றி நாம் பேசினால், நெல் விவசாயிகள், சில மாவட்டங்களில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கீரைத் தோட்டங்களில் பணியாற்றுபவர்களை நாம் சுட்டிக்காட்டலாம் என்றார்.



இதேவேளை, தற்போது சிறுவர்கள் மத்தியில் பரவி வரும் காய்ச்சல் தொடர்பான நோய்கள் குறித்து கொழும்பில் உள்ள லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன விளக்கமளித்திருந்தார்.

இந்த நாட்களில் குழந்தைகளிடையே கடுமையான காய்ச்சல் பரவி வருகிறது. இது புதிய விடயம் இல்லை. ஏனெனில் பருவமழையுடன் காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் பரவுகின்றன. ஒவ்வொரு வருடமும் இதை நாங்கள் 'ஷவர் பீவர்' என்று சொல்றோம். இந்த முக்கிய பிரிவில் நமக்கு மிக முக்கியமானவை டெங்கு, எலிக்காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் சிக்குன்குனியா. அத்துடன் காய்ச்சலுடன் வரும் வயிற்றுப்போக்கு. நான் சொல்ல விரும்பும் மிகப்பெரிய செய்தி என்னவென்றால், உங்கள் குழந்தைக்கு அதிக காய்ச்சல், வாந்தி, வயிற்று வலி அல்லது சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தால், காத்திருக்க வேண்டாம். வைத்தியசாலைக்குச் செல்லுங்கள் என்றார்.