ஹம்பாந்தோட்டைக்கு கப்பலில் வந்திறங்கிய 196 வாகனங்கள் - வெகன் ஆர் 65 இலட்சம் ரூபா



சுமார் 5 வருடங்களாக அமுல்படுத்தப்பட்ட வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதுடன் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட இரண்டாவது தொகுதி வாகனம் நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.
 
இதற்கமைய, ஜப்பானிலிருந்து 196 வாகனங்கள் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
 
இதன்படி, வெகன் ஆர், எல்டோ, டொயோட்டா யாரிஸ், டொயேட்டா ரொய்ஸ், வெசல் உள்ளிட்ட வாகனங்கள் ஜப்பானிலிருந்து நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
டொலர் நெருக்கடி, கொவிட் தொற்று உள்ளிட்ட காரணிகளால் மோசமான பொருளாதார பாதிப்பை எதிர்கொண்ட 2020 ஆம் ஆண்டில் பல பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
அத்துடன் வாகன இறக்குமதியையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
எவ்வாறாயினும், பொருளாதாரம் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில், கடந்த வருட இறுதியில் வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்கள் அடுத்தவாரம் முதல் விற்பனைக்கு வரும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

வெகன் ஆர் காரை 65 இலட்சம் ரூபா முதல் 75 இலட்சம் ரூபா வரையிலும், ஆர்எஸ் காரொன்றை 80 இலட்சம் ரூபா முதல் ஒரு கோடி ரூபா வரையிலும், வெசல் ரக காரை 165 இலட்சம் ரூபாய் முதல் 200 இலட்சம் வரையிலும் விற்பனை செய்ய முடியும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.