சீரற்ற காலநிலையால் 17119 பேர் பாதிப்பு : 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை


நாட்டில் கடந்த சில மாதமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17119 ஆக அதிகரித்துள்ளது.

4947 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளதோடு 161 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சீரற்ற காலநிலையால் இதுவரை  8 பேர் உயிரிழந்துள்ளதோடு 20 பேர் காயமடைந்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேதேநரம் தொடரும் சீரற்ற காலநிலையால் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இலங்கையின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
 
ஊவா, மேல், சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
 
அத்துடன் இலங்கையைச் சூழவுள்ள ஏனைய கடற் பிராந்தியங்களிலும் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலை காணப்படும்.
 
பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதேநேரம் தென்மேல் பருவப்பெயர்ச்சி காரணமாக மழை நீடிப்பதால், மறு அறிவித்தல் வரை மன்னார் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில், கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.