இதுவே கூட்டமைப்பின் நிலைப்பாடு - சர்வகட்சி மாநாட்டில் வாக்குவாதம்

13 திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரப் பகிர்வு வழங்கும் அதேநேரம் மாகாணசபைத்தேர்தலும் நடத்தப்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிபர் செயலகத்தில் நேற்று மாலை சர்வகட்சி கூட்டம் இடம்பெற்றது.

சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பேசப்பட்டது.

இந்தநிலையில் பங்கு பற்றிய கட்சி தலைவர்கள் இது தொடர்பில் தமது நிலைப்பாடுகளை முவைத்தார்.

இதன் போது 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, உதய கம்மன்பில, அத்துரலிய ரத்ன தேரர் உள்ளிட்ட சிலர் எதிரான கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 13ம் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு எனவும், அது மறுக்கப்பட்டால் வெளியக சுயநிர்ணய உரிமையை கேட்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் அதிபர், மாகாணங்களுக்கான அதிகாரம் தொடர்பில் கேட்கிறீர்கள், அதேநேரம் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் கூறுகிறீர்கள். அதிகாரம் வேண்டுமா? தேர்தல் வேண்டுமா? என்பதை தெளிவாக சொல்லுமாறு கூறினார்.

இதற்குப் பதிலளித்த சுமந்திரன், நீங்கள் கூறுவது தவறு 13 க்கான அதிகாரத்தை நடைமுறைப்படுத்தப்படும் அதே நேரம் தேர்தலும் நடத்தப்பட வேண்டும். இவை இரண்டும். ஒரே திசையில் உள்ள விடயம் ஆகவே மாகாணசபை தேர்தல் தேவையா? மாகாணங்களுக்கு அதிகாரங்கள் தேவையா? என தெரிவு செய்யுமாறு கூறுவது பிழையான விடயம் எனக் கூறினார்.

இதனையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாணசபை தேர்தலை நடத்துமாறு கோரினார்.

இதனை மறுத்த சுமந்திரன், தமிழ் மக்களுக்கான தீர்வு 13 ஆம் திருத்தத்திற்கு அப்பால் செல்லவேண்டும் எனவும், மாகாணசபை தேர்தல் நடத்தப்படவேண்டும் எனவும், அதுவே தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு எனவும் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தினர்.