சட்டவிரோதமாக கடல்தாண்டி மீன்பிடி! 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்களையும் அவர்களின் மூன்று இழுவை படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் (13) யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் கலங்கரை விளக்கத்தில் சிறிலங்கா கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா கடற்பரப்பில் இடம்பெறுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக சிறிலங்கா கடற்படையினரால் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, நேற்றைய தினம் (13) யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி இடம்பெறுவதாக கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 03 இழுவைப்படகுகளில் வந்த இந்திய கடற்தொழிலாளர்கள் சட்டவிரோதமாக கடல் தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவது தெரியவந்ததை அடுத்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது 12 இந்திய கடற்தொழிலாளர்களும் அவர்கள் பயணித்த 03 இந்திய மீன்பிடி இழுவை படகுகளும் கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்களும், அவர்களின் மீன்பிடி படகுகளும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டடுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.