இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்! மத்திய வங்கி

இந்திய ரிசர்வ் வங்கியுடன் 1 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்திற்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனவரியில் இந்தியாவிடமிருந்து 400 மில்லியன் டொலர் நாணய இடமாற்று மற்றும் அதற்குப் பின்னர் இரண்டு தவணைகளில் 1.5 பில்லியன் டொலர்களை இலங்கை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணவும் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காணவும் இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை விரைவில் ஏற்பட வேண்டும் என கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தனது ஆறு வருட பதவிக்காலம் முடியும் வரை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றுவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.